பேசி பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம் தி.மு.க.,: பரிசளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு
பேசி பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம் தி.மு.க.,: பரிசளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு
ADDED : அக் 27, 2024 11:58 PM

சென்னை: ''தி.மு.க., என்பதே பேசி பேசி வளர்ந்த கட்சி; அந்த காலத்தில் பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க., இளைஞர் அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டை ஒட்டி நடத்தப்பட்ட, 'என் உயிரினும் மேலான' மாநில அளவிலான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பேச்சுப் போட்டி, மூன்று வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்காக நடந்தது அல்ல. தி.மு.க., கருத்தியலை, அடுத்த நுாற்றாண்டுக்கு துாக்கி சுமந்து செல்ல இருக்கும் பேச்சு போராளிகளை கண்டறிந்து, பட்டை தீட்டும் பயிற்சி பட்டறை. தி.மு.க., என்பதே பேசிப் பேசி வளர்ந்த கட்சி. அந்த காலத்தில் பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த கட்சி என, நம் கட்சி குறித்து சொல்வர்.
ஆனால், அவர்கள் சொல்ல மறந்தது என்னவென்றால், நாம் பேசிய பேச்செல்லாம், வெறும் அலங்கார அடுக்கு மொழி அல்ல. உலகம் முழுதும் நடந்த புரட்சி வரலாறுகளை பேசினோம். உலக அறிஞர்களின் வரலாற்றை பேசினோம்.
நம் நாட்டில் நடைமுறையில் இருந்த கொடுமைகளை பேசினோம். மூட நம்பிக்கை, பிற்போக்குத்தனம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக பேசினோம். பேச்சுக் கலை மிகவும் வீரியமிக்கது. சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
நாமக்கல்லைச் சேர்ந்த சுதர்சனா என்ற மாணவி, 'ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க தலை குனிந்ததால் தான், இன்றைக்கு அவர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்' என்றார். அவதுாறு பரப்புகிறவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்தார். அதைக் கேட்டபோது மகிழ்ச்சி அடைந்தேன்; இது தான், கருணாநிதி ஸ்டைல் பதிலடி.
இப்படித்தான் மக்களின் மனதை தொடுவது போல பேச வேண்டும். சொல்ல நினைக்கும் கருத்துக்களை தெளிவாக, இனிமையாக புரியும்படி பேச வேண்டும்.
சொல் புதிது, சுவை புதிது, தகவல் புதிது. சொல்லும் பாணி புதிது என பாராட்டுவது போல உங்களின் பேச்சுகள் அமைய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

