ADDED : நவ 04, 2025 04:50 AM

''வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளை தமிழகத்தில் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது,'' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
பீஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில், இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், அவசர அவசரமாக தமிழகத்தில் இந்த திருத்த பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த சூழலில், அவசரமாக இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது நியாயமான நடைமுறை அல்ல.
மேலும், இந்த பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதனால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
தேர்தல் கமிஷன் கேட்கும் ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படலாம். இதனால், பலரும் தங்களுடைய ஓட்டுரிமையை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது. அதனால், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

