கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் பேரன் கைது
கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் பேரன் கைது
ADDED : ஜூலை 31, 2025 01:06 AM

சென்னை:கல்லுாரி மாணவர் மீது, 'லேண்ட் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் தனசேகரன் பேரன் சந்திரசேகர், 20, இவரது நண்பர்கள் ஆரோன், 20, யாஷ்வின், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டனர்.
சென்னை, அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நித்தின் சாய், 20. இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தன் கல்லுாரி நண்பரான, அயனாவரம் பி.இ., கோவில் தெருவைச் சேர்ந்த அபிேஷக், 20, என்பவருடன், கடந்த, 28ம் தேதி இரவு, சென்னை திருமங்கலம் பள்ளி சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
விசாரணை ெஹல்மெட் அணியாமல் சென்ற இவர்கள் மீது, மர்ம நபர்கள், 'லேண்ட் ரோவர்' காரை மோதினர். இதனால், துாக்கி வீசப்பட்டு சாலை ஓரமாக கிடந்த நித்தின் சாய் மீது, காரை ஏற்றி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, திருமங்கலம் போக்குவரத்து போலீசார், விபத்து என வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
ஆனால், நித்தின் சாய் பெற்றோர், 'என் மகனை திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்' என, புகார் அளித்தனர். கொலைக்கு பின்னணியில், சென்னை, கே.கே.நகர், தி.மு.க., கவுன்சிலர் தனசேகரின் பேரன் சந்திரசேகர் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, இந்த வழக்கு, திருமங்கலம் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், காதல் விவகாரத்தில் காரை ஏற்றி, நித்தின் சாய் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இதையடுத்து, சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் மீது, கொலை உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., பிரமுகர்கள் புடை சூழ, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், உதவி கமிஷனர் முன் சரணடைந்தார். அதேபோல, காரை ஓட்டிய சென்னை புழல் பகுதியை சேர்ந்த ஆரோனும் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பறிமுதல் போலீசாரிடம் சந்தி ர சேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'காரை ஓட்டிய ஆரோன், நித்தின் சாயை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. ஆரோனின் காரில், என் நண்பர்களுடன் அண்ணா நகருக்கு சென்றேன். அங்கு எங்களுக்கும் மற்ற கல்லுாரி மாணவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து விட்டனர்.
'அவர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே, ஆரோன் காரை வேகமாக இயக்கினார். அப்போது கார் இருசக்கர வாகனத்தில் மோதி விட்டது. இதனால் காரை ரிவர்ஸ் எடுத்தோம்' என, கூறியுள்ளார். இவரது வாக்குமூலத்தின்படி நெசப்பாக்கத்தை சேர்ந்த சந்திரசேகரின் நண்பர் யாஷ்வின் என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், வளசரவாக்கம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

