காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,
காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,
UPDATED : அக் 25, 2024 06:47 AM
ADDED : அக் 23, 2024 04:33 AM

காமராஜரை அவதுாறாக பேசிய, தி.மு.க., மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவரது படத்திற்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து, சமூக வலைதளங்களில், காங்கிரசார் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த விழாவில், காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக, ராஜிவ்காந்தி பேசியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
'அரசியல் புனிதர் காமராஜர் பற்றியும், அவருடைய திட்டங்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் அசிங்கமாக பேசிய ராஜிவ்காந்தியே மன்னிப்பு கேள்' என்ற வாசகத்துடன், அவரது படத்திற்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து, அதை சமூக வலைதளங்களில் காங்கிரசார் பகிர்ந்து வருகின்றனர்.
காங்கிரஸ் பேச்சாளர் சூளை ராமலிங்கம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், ராஜிவ்காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்து, புகார் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு பொதுச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: காமராஜர் குறித்த வரலாறு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாத ராஜிவ்காந்தி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. 'காமராஜர் தன் சொந்த நிதியிலா பள்ளிகளை திறந்தார்' என கேட்டுள்ளார். ராஜாஜி மூடிய பள்ளிகளை மட்டுமே காமராஜர் திறந்தார் என, பொய்யான கருத்தை விதைக்க முயன்றுள்ளார். பொறுப்பில்லாத பேச்சுக்காக ராஜிவ்காந்தி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -