பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு 'டாஸ்மாக்' கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?
பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு 'டாஸ்மாக்' கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?
ADDED : ஆக 08, 2025 03:53 AM

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களின் ஓட்டுகளை கவர, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு மாதத்தின் முதல் நாளன்று விடுமுறை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 மதுபான விற்பனை கடைகளை நடத்துகிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் இந்த கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை.
தினமும் சராசரியாக 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை நாட்களில் அதிகமாகவும் மது வகைகள் விற்பனையாகின்றன. தனியார் நிறுவன பணியாளர்களுக்கு, மாதத்தின் முதல் நாளில் சம்பளம் வழங்கப்படுகின்றன. சம்பளத்தை முழுதுமாக பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் நோக்கில், கேரளாவில் மாதத்தின் முதல் நாளன்று, அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதை, தமிழகத்திலும் அமல்படுத்துமாறு, 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்துமாறு, தி.மு.க., கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. பெண்கள் ஓட்டுகளை கவர, மது கடைகளுக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, வரும் சுதந்திர தினத்தில், முதல்வர் ஸ்டாலின் உரையில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.