தி.மு.க., தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கம்: எல்.முருகன் குற்றச்சாட்டு
தி.மு.க., தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கம்: எல்.முருகன் குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 28, 2024 11:52 AM
ADDED : ஏப் 28, 2024 11:47 AM

கோவை: ‛‛ தி.மு.க.,வின் தோல்வியை மறைக்க வாக்காளர் பட்டியலில் இருந்து பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது '' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: ‛ஸ்டிராங் ரூம் ' ல் சிசிடிவிக்களில் தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. காரணம் சொல்வதை விட்டு, 24 மணி நேரமும் அந்த அறையை கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் பல இடங்களில் பாஜ., ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. கோவை, தென்சென்னை, நீலகிரி என தமிழகம் முழுவதும் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. தி.மு.க.,வின் தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்த முடியாது என தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் அளித்து உள்ளது. காங்கிரசும், ‛ இண்டியா' கூட்டணியும் தோல்வியை திசைதிருப்ப தேவையில்லாமல் இந்த புகாரை கூறுகின்றனர்.
500 ஆண்டுகால மக்களின் போராட்டம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அங்கு செல்ல மாட்டேன் என ராகுல் கூறுவது, கடவுள் மீது அவருக்கு நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

