கச்சத்தீவை மீட்காத தி.மு.க.,: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கச்சத்தீவை மீட்காத தி.மு.க.,: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ADDED : ஏப் 01, 2024 02:33 AM
''கச்சத்தீவை இலங்கைக்கு, காங்கிரஸ் தாரைவார்த்த போது, அதற்கு பச்சைக்கொடி காட்டிய தி.மு.க., மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த போதும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி:
மத்தியில், 1974ம் ஆண்டு காங்கிரஸ் அரசு இருந்தது. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார்.
அப்போது, இலங்கை பிரதமராக இருந்த பண்டாரநாயகா, நட்புணர்வு அடிப்படையில் இந்திராவிடம் கச்சத்தீவை கேட்க, அவர் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.
அது, இந்தியாவின் ஒரு பகுதி. கச்சத்தீவை கொடுப்பதற்கு முன், தமிழக மீனவர்கள் அங்கு தான் மீன் பிடித்தனர்.
எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என, தி.மு.க., கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.
அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டார் கருணாநிதி. பார்லிமென்டில் விவாதம் இல்லாமல், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ஏன் கொடுத்தனர் என்றால், அன்று சர்க்காரியா கமிஷன் விசாரணையில், இந்திரா உள்ளே போட்டு விடுவார் என்று பயந்து, கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதி சம்மதித்து விட்டார்.
கடந்த 1991ல் சுதந்திர தின விழாவில், கச்சத்தீவை மீட்போம் என்றார் ஜெயலலிதா. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை.
தி.மு.க., 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தது; அப்போதாவது கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அப்போதும் வாயே திறக்கவில்லை. இப்போது ஸ்டாலின் கச்சத்தீவை மீட்போம் என்கிறார். இதை மீனவ மக்கள் நம்புவரா.
ஜெயலலிதா ஒருபுறம் போராடினாலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தி.மு.க., தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நடவடிக்கை எடுத்திருக்கலாம்; ஆனாலும் செய்யவில்லை. மீனவர்கள் தாக்கப்படும் போது, கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

