தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவிகள் கேட்கும் மகளிரணி
தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவிகள் கேட்கும் மகளிரணி
ADDED : நவ 04, 2026 05:00 AM

மதுரை: 'தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவியை, பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, மகளிரணி நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள, 77 மாவட்டங்களை 110 ஆக அதிகரித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கட்சி விதித்துள்ள நிபந்தனைகளால், முக்கிய மாவட்ட செயலர்கள் பலர் பதவியிழக்க உள்ளனர்.
கட்சியின் மாவட்ட எண்ணிக்கை, 110 ஆக அதிகரிப்பதால், மாவட்ட செயலர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சிபாரிசால், இளைஞரணியை சேர்ந்த பலருக்கும், மாவட்ட செயலர் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
அதேநேரம், துணை பொதுச்செயலர் கனிமொழி வசம் உள்ள மகளிரணியிலும், 'மறுசீரமைப்பில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்து, குறைந்தபட்சம் 10 பேருக்கு மாவட்ட செயலர் பதவி தர வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க., மகளிரணியினர் கூறியதாவது: தி.மு.க.,வில், பெண் மாவட்ட செயலராக, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மட்டுமே இருக்கிறார். பெண்கள் ஓட்டுகளை கவர்வதில், மகளிரணிக்கு முக்கிய பங்குண்டு. 'வெல்லும் பெண்கள்' என்ற பெயரில், கடந்த தேர்தலின்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிரசாரம் செய்தோம்.
ஆளுங்கட்சியான த.வெ.க.,வில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போல, தி.மு.க.,விலும் வாய்ப்பளிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிராக, சமீபத்தில், தி.மு.க., மகளிரணி நடத்திய போராட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றது. எனவே, மாவட்ட செயலர் போன்ற பதவிகளை வழங்கினால், கட்சி பணிகளில் இன்னும் ஆர்வமாக, பெண்கள் செயல்படுவோம். எங்கள் ஆதங்கத்தை, மாவட்ட வாரியாக, எழுத்துப் பூர்வமாக கனிமொழியிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
