வி.சி.க., ஓட்டு வங்கி கூட தி.மு.க., விற்கு இல்லை: திருமாவளவனின் பலம் அவருக்கே தெரியவில்லை சொல்கிறார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
வி.சி.க., ஓட்டு வங்கி கூட தி.மு.க., விற்கு இல்லை: திருமாவளவனின் பலம் அவருக்கே தெரியவில்லை சொல்கிறார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
ADDED : ஜூலை 01, 2025 12:23 AM
திண்டுக்கல்:
''வி.சி.க.,வின் ஓட்டு வங்கி கூட தி.மு.க., விற்கு இல்லை. திருமாவளவனின் பலம் அவருகே தெரியவில்லை'' என திண்டுக்கல்லில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
அவர் கூறியதாவது: வேடசந்துாரில் நடந்த அரசு விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., புகைப்படங்களை குப்பையில் போட்டுள்ளனர். அமைச்சர் சக்கரபாணி கலந்து கொள்கிறார் என்பதால் படங்களை அகற்றி உள்ளனர். இது கண்டனத்திற்குரியது. அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
போலீசார் கஸ்டடி மரணங்கள் அதிகரிப்பது தி.மு.க., ஆட்சியில் சாதாரணமாகிவிட்டது. போதைப்பொருட்களின் சந்தைக்களமாக தமிழகம் மாறிவிட்டது.
கலெக் ஷன், கமிஷன், கரப்ஷனுக்கே தி.மு.க., விற்கு நேரம் சரியாக இருக்கிறது. அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கூறியுள்ளார். அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பழனிசாமி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
அ.தி.மு.க., என்றால் பழனிசாமி. பழனிசாமி என்றால் அ.தி.மு.க., என அமித்ஷாவிற்கும் தெரியும். கூட்டணி ஆட்சி இல்லை என பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.அவர்தான் சுப்ரீம் கோர்ட்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் திடீரென தி.மு.க., விற்கு எதிராக கருத்து சொல்கிறார். மீண்டும் சமாதானம் ஆகிறார். தி.மு.க., கூட்டணியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை .தி.மு.க.,விற்கு 10 சதவீதத்திற்கு மேல் ஓட்டு வங்கி இருக்காது. கூட்டணி கட்சியின் பலம் தான். திருமாவளவன் பலம் அவருக்கே தெரியவில்லை. தி.மு.க.,வை விட ஓட்டு வங்கி அதிகம் உள்ளது வி.சி.க., அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது இல்லை.
வி.சி.க., சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை கழித்துப் பார்த்தால் தி.மு.க., வில் ஒன்றும் இல்லை. த.வெ.க., இணைய வாய்ப்புள்ளதா என ஜோதிடம் சொல்ல முடியாது. எதிர்பாராத கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்து சேரும் என்றார்.