'ஸ்டிக்கர்' ஒட்டியே ஆட்சியை தி.மு.க., நிறைவு செய்தது: வானதி
'ஸ்டிக்கர்' ஒட்டியே ஆட்சியை தி.மு.க., நிறைவு செய்தது: வானதி
ADDED : ஜன 25, 2026 05:50 AM

சென்னை: மத்திய அரசின் திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டியே, ஐந்தாண்டுகள் ஆட்சியை தி.மு.க., முடித்து விட்டதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.
சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு தயாரித்த உரையை படிக்க மறுத்ததற்கான காரணங்களை பட்டியலிட்டு, கவர்னர் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு பதிலளித்து பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் அதற்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்த்தேன்.
ஆனால், கவர்னர் கேட்ட கேள்விகளுக்கு, எவ்விதமான அறிவார்ந்த, ஆழமான விளக்கங்கள் தரப்படவில்லை.
இதிலிருந்து கவர்னர் தெரிவித்த சட்டம் - ஒழுங்கு சீரழிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம் போன்ற குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெளிவாகிறது.
நுாறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளின் சரியான விபரங்களை, தி.மு.க., அரசு தருவதில்லை. இதில் பல தவறுகள் நடப்பதால் தான் நிதி தாமதமாகிறது. இதற்கு பதில் தராமல், நிதி தரவில்லை என பொத்தாம் பொதுவாக மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டுவது அல்லது மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதை மட்டுமே, தி.மு.க., அரசு செய்து வருகிறது. 'ஸ்டிக்கர்' ஒட்டியே ஐந்தாண்டு ஆட்சியை முடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

