பேச்சு, பேட்டி, அறிக்கை: காலில் விழாத குறையாக கெஞ்சி தொகுதி பங்கீடை முடிக்கும் திமுக
பேச்சு, பேட்டி, அறிக்கை: காலில் விழாத குறையாக கெஞ்சி தொகுதி பங்கீடை முடிக்கும் திமுக
ADDED : மார் 06, 2024 12:17 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சை பார்க்கும் போது, தி.மு.க., கூட்டணியில் முறிவு ஏற்படும் போல் உள்ளது. நாங்கள் யாரையும் வரும்படி கெஞ்சவில்லை. எங்களுக்கு பயந்து, தி.மு.க., அவசர, அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. விட்டால் அ.தி.மு.க.,வுக்கு வந்துவிடுவர் என்பதால், காலில் விழாத குறையாக கெஞ்சி, தொகுதி பங்கீடை முடிக்கின்றனர். இது தோல்வி பயத்தை காட்டுகிறது.
அப்ப தங்கமணி, வேலுமணி குரூப், பிரேமலதாவை வீட்டிற்கே போய் பார்த்தாங்களே... அது எதுக்கு, வெறும் காபி, மிக்சர் சாப்பிடவா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு, 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. இது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி. பொருளியல், புள்ளியியல் துறையில் எழுத்தர்களாக பணியில் சேர்பவர்கள், 35 ஆண்டுகள் வரை பணியாற்றியும், பதவி உயர்வு பெறாமல் எழுத்தர்களாகவே ஓய்வு பெறுவது மிகப்பெரிய கொடுமை.
அரசு துறைகளில் இப்படி பட்டியல் எடுக்க ஆரம்பிச்சா, அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும்... அவ்வளவு பேர் புகைஞ்சிட்டு இருக்காங்க!
த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:
கொரோனா காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி தொழில் முற்றிலும் நலிவடைந்தது. அங்கொன்று, இங்கொன்றுமாக செயல்பட்டு வந்த ஜவுளி தொழில், மத்திய அரசின் வருமான வரிச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட திருத்தத்தால் முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது.
முதல் ஆளா பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமான இவங்க தலைவர்கிட்ட சொல்லி, புதிய விதியை வாபஸ் பெற வச்சுடலாமே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தி.மு.க.,வை அழிப்பேன் எனக் கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் தமிழக அரசியல் வரலாறு என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆமாம்... எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் முதல்வராகினர் என்பது தான், தமிழக அரசியல் வரலாறு. அண்ணா மலையும் தி.மு.க.,வை அழிப்பேன் என்று தான் கிளம்பி இருக்கிறார்.

