மாநகராட்சியில் கடை ஒதுக்கீடு ஏலம் தி.மு.க., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
மாநகராட்சியில் கடை ஒதுக்கீடு ஏலம் தி.மு.க., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
ADDED : அக் 10, 2025 09:28 PM

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளை ஒதுக்கீடு செய்வதில் பழைய கடைகாரர்களை புறக்கணிப்பதாக கூறி தி.மு.க., மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் சிதம்பரம் தீக்குளிக்க முயன்றார்.
காரைக்குடியில் 1987ல் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. முற்றிலும் சேதம் அடைந்து இடிந்த நிலையில் இருந்த இந்த கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.3.95 கோடியில் 27 புதிய கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. புதிய கடைகளை ஒதுக்க ஏலம் அறிவிக்கப்பட்டு நேற்று காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏற்கனவே அறிவித்தபடி பழைய கடைகாரர்களுக்கு கடை ஒதுக்காமல் புறக்கணிப்பதாக கூறி தி.மு.க., மாவட்ட ஆதிதிராவிடர் நல் அமைப்பாளர் சிதம்பரம் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தார். மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்ற முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சிதம்பரம் கூறியதாவது: நீண்ட காலமாக பழைய பஸ் ஸ்டாண்டில் கடை நடத்தி வந்தோம். முறையாக வாடகையும் செலுத்தி வருகிறோம். பழைய கடைகளை அகற்றி விட்டு புதிய கடைகள் கட்டுவதாகவும், பழைய கடைக்காரர்களுக்கு மீண்டும் கடைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடுகின்றனர். ஏலம் எடுப்பவர்களுக்கு மட்டும் தான் கடை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பாகுபாடு காட்டப்படுகிறது. இந்த ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு என்றார்.