UPDATED : அக் 20, 2026 07:38 PM
ADDED : அக் 20, 2026 07:36 PM

சென்னை: தி.மு.க., நிர்வாகி, பொது பாதையை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடத்தை அகற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்த நசுருல்லா என்பவர் தாக்கல் செய்த மனு:
பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொது பாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி வாகனங்கள் மற்றும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு செய்த சையதுல்லா, அவரது மருமகனும், தி.மு.க.,வை சேர்ந்த பள்ளிகொண்டா பேரூராட்சி துணை தலைவர் வாசிம் அக்ரமிடம் கேட்ட போது, ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என கூறி, மிரட்டினர்.
வேலுார் கலெக்டர், தாசில்தாரிடம், புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
