முதல்வர் படம் பேனரை கிழித்த தி.மு.க., நிர்வாகி: திருப்பூர் அருகே வெடித்த கோஷ்டிப்பூசல்
முதல்வர் படம் பேனரை கிழித்த தி.மு.க., நிர்வாகி: திருப்பூர் அருகே வெடித்த கோஷ்டிப்பூசல்
ADDED : ஜன 09, 2026 06:54 AM

பொங்கலுார்: திருப்பூர் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில், ஆளுங்கட்சியினர் மத்தியில் வெடித்த கோஷ்டி பூசலால், முதல்வர் படம் இடம்பெற்ற பேனரை நிர்வாகி கிழித்ததால், பிரச்னை ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், காட்டூரில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. பரிசு தொகுப்பு பெற பொதுமக்கள் ஏராளமானோர் கூடி இருந்தனர். இதற்காக அமைக்கப்பட்டிருந்த பேனரில் முதல்வர், துணை முதல்வர், எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் பொங்கலுார் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் படம் இடம் பெற்றிருந்தது.
ஆனால், மாவட்ட அமைச்சர்களான சாமிநாதன், கயல்விழி ஆகியோரின் படம் இடம் பெறவில்லை. இந்த பேனரை பார்த்த தி.மு.க., மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ''பேனரில் வடக்கு ஒன்றிய செயலாளர் படம் எதற்காக, தெற்கு ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ளது,'' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் பேனரை கிழித்து வீசினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் படமில்லை
பேனரை கிழித்த மாவட்ட தி.மு.க. பிரதிநிதி செந்தில்குமார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்ட அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி மாவட்ட துணைச் செயலாளர் குமார் ஆகியோர் போட்டோ இல்லாமல், பொங்கலுார் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் போட்டோ இருந்த பேனரை ரேஷன் கடைக்குள் கட்டினர். அமைச்சர்கள் போட்டோ இல்லாமல், வடக்கு ஒன்றிய செயலாளர் போட்டோவை தெற்கு ஒன்றியத்தில் எதற்காக ரேஷன் கடைக்குள் கட்டுகிறீர்கள், என்றேன். அப்படித்தான் கட்டுவேன் என்றதால் அகற்றினேன். ரோட்டில் கட்டியிருந்தால் கேள்வி கேட்டிருக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரவர் விருப்பம்
தெற்கு ஒன்றிய செயலாளர் சிவாச்சலம் கூறுகையில், ''பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதற்காக பிளக்ஸ் பேனர் கட்டி இருந்தோம். தெற்கு வடக்கு ஒன்றியத்திற்கு மொத்தமாக பேனர் அச்சிட்டோம்.
வடக்கு ஒன்றிய செயலாளர் போட்டோ இருப்பதாக கூறி, செந்தில்குமார் பேனரை கிழித்து எறிந்து விட்டார். பேனர் வைப்பது அவரவர் விருப்பம். அவரும் வைத்துக்கொள்ளலாம்.
இது சம்பந்தமாக காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்,'' என்றார்.

