சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க., நிர்வாகிகள் எதிர்ப்பு
சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க., நிர்வாகிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 30, 2024 08:26 AM
சென்னை : 'காங்கிரசுக்கு சீட் வழங்க கூடாது; தி.மு.க., இந்த முறை போட்டியிட வேண்டும்' என, தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினரிடம், சிவகங்கை மவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தேர்தல் ஒருங்கணைப்பு குழுவினர் நான்காவது நாளாக, நேற்று சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகங்கை தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு தாரை வார்க்க வேண்டாம். 'சிட்டிங்' எம்.பி., கார்த்தி சிதம்பரம் தி.மு.க., அரசை தொடர்ந்து விமர்சித்து வருவதால் தி.மு.க., செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், சிவகங்கை தொகுதியை தொடர்ந்து காங்கிரசுக்கு ஒதுக்குவதால், உதயசூரியன் சின்னத்திற்கு, தொகுதி மக்களிடம் அங்கீகாரம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே, இம்முறை தி.மு.க., சிவகங்கைத் தொகுதியில் கட்டாயம் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
சிவகங்கை மாவட்டத்தை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அத்தொகுதியிலும் வரும் தேர்தலில் தி.மு.க.,தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.