ADDED : நவ 14, 2025 11:52 PM
சென்னை: 'பீஹாரில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தமிழகத்திலும் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் தான்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் கிண்டல் அடித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி சார்பாக 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே வென்றது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது, மதியம் நிலவரப்படி காங்கிரஸ் 11 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து, தன் எக்ஸ் த ள பக்கத்தில் பதிவிட்ட சாய் லட்சுமிகாந்த், 'தமிழகத்தில் 117 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. பீஹாரில் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்திலும் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் தான்' என கிண்டல் அடித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசை, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.,வைச் சேர்ந்தவரே கிண்டலடித்ததால், காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

