கிரானைட் குவாரி டெண்டரை எதிர்த்து மனு தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு ரூ.3 லட்சம் அபராதம்
கிரானைட் குவாரி டெண்டரை எதிர்த்து மனு தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு ரூ.3 லட்சம் அபராதம்
ADDED : நவ 23, 2024 12:21 AM

சென்னை:தர்மபுரி மாவட்டத்தில், கருப்பு கிரானைட் குவாரி குத்தகை தொடர்பான டெண்டரை எதிர்த்து, தி.மு.க., முன்னாள் எம்.பி., தாக்கல் செய்த மூன்று மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; 3 லட்சம் ரூபாயை தொண்டு நிறுவனத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது
குவாரி குத்தகை
தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், வழக்கறிஞருமான ஆர்.தாமரைசெல்வன் தாக்கல் செய்த மனு:
தர்மபுரி மாவட்டத்தில், கருப்பு கிரானைட் குவாரி குத்தகை வழங்குவதற்கான டெண்டர் மற்றும் ஏல அறிவிப்பு, 2020 செப்., 10ல் வெளியிடப்பட்டது.
தர்மபுரி, பென்னாகரம், கரிமங்கலம், ஹரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில், குவாரி குத்தகை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல், தர்மபுரி கலெக்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே குத்தகை வழங்க முடியும். ஆனால், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி, கிரானைட் குவாரி குத்தகை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கலெக்டர் மேற்கொண்டு நடவடிக்கைகளை தொடரவும், தேர்வு பெற்ற டெண்டர்தாரருக்கு சாதகமாக குத்தகை உரிமம் வழங்கவோ, இடத்தை ஒப்படைக்கவோ கூடாது என்றும் இடைக்கால உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடினார். டெண்டர் விடப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் கிரானைட் குவாரி வருவதால், அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதங்களை ஏற்ற முதல் பெஞ்ச், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 'நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன், முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும்' என்றும் முதல் பெஞ்ச் தெரிவித்தது. இந்த வழக்கால், கோடிக்கணக்கில் தங்கள் பணம் முடங்கி உள்ளதாகவும், அபராதம் விதிக்கும்படியும், டெண்டர் எடுத்தவர்கள் தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து, மூன்று மனுக்களை தாமரைசெல்வன் தாக்கல் செய்திருந்ததால், ஒவ்வொரு மனுவுக்கும் ௧ லட்சம் ரூபாய் என, ௩ லட்சம் ரூபாய் வழக்கு செலவுத் தொகையாக, மனுதாரருக்கு முதல் பெஞ்ச் விதித்தது. அந்த தொகையை, தொண்டு நிறுவனத்துக்கு வழங்கவும் உத்தரவிட்டது.
செல்லகுமார் வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குவாரி டெண்டர் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., செல்லகுமார் தாக்கல் செய்திருந்த மனு, முதல் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
செல்லகுமார் நேரில் ஆஜராகி வாதத்தை துவக்கினார். குவாரியால் அந்தப் பகுதியில் யானைகள், மனிதர்கள் உயிரிழப்பு குறித்து தெரிவித்தார்.
அதற்கு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் குவாரி நடக்காது என்றும், வனப்பகுதிக்கு அப்பால் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உத்தரவாதம் பெறுவதாகவும், அதை அரசு தரப்பில் சரிபார்ப்பதாகவும் அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார்.
டெண்டர் எடுத்தவர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாத விபரங்களை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, செல்லகுமாரிடம், முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது; அவரது பதில் திருப்தி அளிக்கவில்லை.
பின், 'உங்களை குறைத்து மதிப்பிடவில்லை; சட்ட ரீதியாக பதில் அளிக்க வழக்கறிஞரை வைத்து வாதாடுங்கள்' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
இதுகுறித்து, 'உங்கள் வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுங்கள்' எனவும் அறிவுறுத்தியது.
விசாரணையை, வரும் 28க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.