'முல்லை பெரியாறு பராமரிப்பு பணியில் வேடிக்கை பார்க்கிறது தி.மு.க., அரசு'
'முல்லை பெரியாறு பராமரிப்பு பணியில் வேடிக்கை பார்க்கிறது தி.மு.க., அரசு'
ADDED : டிச 08, 2024 02:26 AM

சென்னை: 'முல்லைப்பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி பெறாமல், தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத்திற்கும், பல மாவட்ட மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள், ஆண்டுதோறும் அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
அ.தி.மு.க., ஆட்சியில், 2020 - 21 வரை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கேரள வனத்துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் நடப்பாண்டு அணை மராமத்து பணிக்காக, தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள், கட்டுமானப் பொருட்களை ஏன் கொண்டு சென்றுள்ளனர்.
வல்லக்கடவு சோதனைச் சாவடியில், கட்டுமானப் பொருட்களை கொண்டு சென்ற இரண்டு லாரிகளும் கேரள வனத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கேரள நீர்வளத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே, கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக, தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தங்களுக்கு இதுகுறித்து எந்த தகவலும் வரவில்லை; லாரிகளை அனுமதிக்க மாட்டோம் என, கேரள வனத் துறையினர் கூறியுள்ளனர். கட்டுமானப் பொருட்களை கொண்டு சென்ற லாரிகளை, அணை பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.
இது, ஐந்து மாவட்ட மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள், தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பகுதியில், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, தேவையான அனுமதி பெறாமல், தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது. பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.