உழவர்களைக் கண்டுகொள்ளாது, "உதய" விழா கொண்டாடும் திமுக அரசு; நயினார் நாகேந்திரன் விமர்சனம்
உழவர்களைக் கண்டுகொள்ளாது, "உதய" விழா கொண்டாடும் திமுக அரசு; நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ADDED : நவ 27, 2025 04:36 PM

சென்னை: உழவர்களைக் கண்டுகொள்ளாத திமுக 'உதய' விழா கொண்டாடுகிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் விளைபயிர்கள் வீணாகி, விவசாயிகள் விழிகளில் கண்ணீர்க் குளம் பெரும் அவலம் நடைபெற்றுவருகிறது.நாகையில் 1,000 ஏக்கர் தாளடிப் பயிர்கள், திருவாரூரில் 7,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், திருத்துறைப்பூண்டியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள், தூத்துக்குடியில் 50,000க்கும் மேற்பட்ட வாழைகள், கடலூரில் 300 ஏக்கர் சம்பா பயிர்கள், சிதம்பரத்தில் 750 ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 300 ஏக்கர் சம்பா பயிர்கள் என மாவட்ட வித்தியாசமின்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் கொத்துக் கொத்தாகப் பயிர்கள் மழை நீரில் சேதமடைந்துள்ளன.
செய்வதறியாது விவசாயிகள் தவித்து வரும் வேளையில், தக்க இழப்பீடு வழங்கி துயரைத் துடைக்க வேண்டிய திமுக அரசோ துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. உழவர்களைக் கண்டுகொள்ளாத திமுக 'உதய' விழா கொண்டாடுகிறது.
உலகுக்கே அன்னமிடும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில், அவர்களை அலட்சியப்படுத்தி தனது கேளிக்கைக் கொண்டாட்டங்களாலும் விளம்பர மோகத்தாலும் கேக் ஊட்டிக் கொண்டாடும் திமுக அரசை விரைவில் மக்கள் தூக்கியெறிவர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

