மதநல்லிணக்கத்தை விரும்பாத தி.மு.க., அரசு: ஹிந்து தமிழர் கட்சி தலைவர் பேட்டி
மதநல்லிணக்கத்தை விரும்பாத தி.மு.க., அரசு: ஹிந்து தமிழர் கட்சி தலைவர் பேட்டி
ADDED : ஜன 13, 2026 10:26 AM

பொள்ளாச்சி: ''தி.மு.க. அரசு ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே மதநல்லிணக்கத்தை தடுத்து, பிரிவினை மற்றும் பிரச்னையை துாண்டி விட நினைக்கிறது,'' என, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில், விவேகானந்தா சேவை மையம் சார்பில் சனாதன தர்ம விழிப்புணர்வு ஹிந்து எழுச்சி கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க வந்த ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், தீய சக்தி ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் தருணத்தில், 'பராசக்தி' படம் வெளியாகியுள்ளது. முடிந்து போன கல்யாணத்துக்கு மேளம் கொட்டுவது போல, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு 'சில்க்' சட்டை போட்டது போன்று படம் வெளியிட்டுள்ளனர்.
துாய சக்தி, தீய சக்தி எங்களுக்கு வேண்டாம். ஹிந்து சக்தி தான் வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீது உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவு, இருநீதிபதி உத்தரவிட்டும் இந்த அரசு நிறைவேற்றாமல் ஹிந்துக்களை துன்பப்படுத்துகின்றனர். மேல் முறையீடு செய்தாலும் வெற்றி பெறுவோம். நீதி போராட்டத்தில் முருகனுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
சிறுபான்மை இன மக்கள் ஓட்டுக்கள் பெற, தி.மு.க. அரசு இஸ்லாமியர்களையும், ஹிந்துக்களையும் ஏமாற்றுகிறது. தி.மு.க. அரசு ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே மதநல்லிணக்கத்தை தடுத்து, பிரிவினை மற்றும் பிரச்னையை துாண்டி விட நினைக்கிறது.
இந்த ஆட்சியில், போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. சட்டம், ஒழுங்கு பாதித்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நிம்மதியற்று உள்ளனர். இதைத்தான் 'திராவிட மாடல்' என, தி.மு.க.,வினர் கொண்டாடுகின்றனர்.
இந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்பு உருவாகி உள்ளது. ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் அரசு மீண்டும் ஆட்சி, அதிகாரத்துக்கு வரக்கூடாது. அதற்கேற்ப எங்களது கள பிரசாரம் இருக்கும்.
இவ்வாறு, கூறினார்.

