ADDED : நவ 16, 2025 12:47 AM

சென்னை: 'துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவதாக, தி.மு.க., அரசு நாடகமாடுகிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; சென்னை மாநகரில் குப்பை அள்ளும் பணிகளை, மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த ஆகஸ்டில் துாய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து, அவர்களை தி.மு.க., அரசு கைது செய்தது. எதற்கும் அஞ்சாமல் துாய்மைப் பணியாளர்கள் 107வது நாளாக போராடி வருகின்றனர். ஆனால், இன்று வரை அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கக்கூட தி.மு.க., அரசு முன்வரவில்லை.
துாய்மைப் பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்க, அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை தி.மு.க., அரசு அரங்கேற்றி உள்ளது.
போராடும் துாய்மைப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

