புதிய மருத்துவ கல்லுாரி துவங்காமல் மத்திய அரசிடம் தி.மு.க., அரசு சரண் * அன்புமணி குற்றச்சாட்டு
புதிய மருத்துவ கல்லுாரி துவங்காமல் மத்திய அரசிடம் தி.மு.க., அரசு சரண் * அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : பிப் 18, 2025 08:15 PM
சென்னை:புதிய மருத்துவ கல்லூரி துவங்காமல், மத்திய அரசிடம், தி.மு.க., அரசு சரணடைந்து விட்டதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
வரும் 2025- - 26ல் புதிய மருத்துவ கல்லுாரிகளை துவங்க, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று முடிந்து விட்டது. புதிய கல்லுாரிகளை துவங்கவோ, ஏற்கனவே உள்ள கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தவோ, தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை.
தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி மறுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கை, நடப்பாண்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்காததால், மத்திய அரசின் விதியை எதிர்க்க இடம் கொடுக்காமல், தமிழக அரசு சரணடைந்து விட்டது. மருத்துவ கல்வி வளர்ச்சிக்கும், ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி கனவுக்கும் தி.மு.க., அரசு துரோகம் செய்து விட்டது.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், தி.மு.க., ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவ கல்லுாரி கூட துவங்கப்படவில்லை. ஐந்தாண்டு ஆட்சி நடத்தியும், ஒரு அரசு மருத்துவ கல்லுாரி கூட திறக்காத ஒரே அரசு என்ற அவப்பெயரை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பெற்றுள்ளது.
மருத்துவ கல்வி வரலாற்றில், இந்த ஐந்தாண்டுகள் இருண்ட காலமாகவே பதிவு செய்யப்படும். இதற்கு காரணமானவர்களை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.