தினந்தோறும் வெளியாகும் திமுக அரசின் ஊழல்: நயினார் நாகேந்திரன்
தினந்தோறும் வெளியாகும் திமுக அரசின் ஊழல்: நயினார் நாகேந்திரன்
ADDED : அக் 31, 2025 09:00 PM

சென்னை: 'தினம்தோறும் திமுக அரசின் ஊழல் தொடர்கிறது. முன்தினம் ரூ.888 கோடி ஊழல், இன்று ரூ.160 கோடி ஊழல் என்ற செய்தி தான் தினந்தோறும் வருகிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்த திமுக அரசு தற்போது அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாகக் கொள்முதல் செய்யப்படும் நெல்லை கிடங்குகளுக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி ஊழல் புரிந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே, விளைவித்த நெல்லை சரிவர அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகளும், கொள்முதல் செய்த நெல்லை கொண்டு செல்லும் லாரிகளுக்கான வாடகையை சரிவர தராததால் லாரி உரிமையாளர்களும் அவதியுற்று வரும் வேளையில், திமுக அரசோ ஒரு டன்னிற்கு ரூ.412 ரூபாய் மோசடி செய்து கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறது. அதனைக் கண்டுகொள்ள வேண்டிய அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டு, வெற்றுப் பெருமை பேசி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் பொழுது விடிந்தால் நல்ல செய்தி வருகிறதோ இல்லையோ, முன்தினம் ரூ.888 கோடி ஊழல், இன்று ரூ.160 கோடி ஊழல் என்ற செய்தி தான் தினந்தோறும் வருகிறது. நாடு போற்றும் நல்லாட்சி என்ற போர்வையில், மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டித் தின்று மக்கள் நலனை சூறையாடும் இத்தகைய திமுக அரசு தமிழகத்திற்கு வந்த ஆகப்பெரும் தீங்கு. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

