'வன்னியர் இட ஒதுக்கீட்டில் நாடகம் ஆடும் தி.மு.க., அரசு!' : ராமதாஸ்
'வன்னியர் இட ஒதுக்கீட்டில் நாடகம் ஆடும் தி.மு.க., அரசு!' : ராமதாஸ்
ADDED : ஜூலை 25, 2024 10:32 AM

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்பதற்காக, தி.மு.க., அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நாடகமாடுவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
வன்னியர் 10.50 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க, மேலும் ஓராண்டு காலம் தேவை என்று, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழக அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.
கடந்த 2022 ஏப்ரல் 8ல், அன்புமணி தலைமையில் பா.ம.க., குழு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது, 'சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவோம்' என, உறுதி அளித்தார்.
அப்போது, வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று கூறாத முதல்வர் ஸ்டாலின், இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிறார். முதல்வரின் திடீர் மன மாற்றத்தின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது தெரியவில்லை.
வன்னியர் இட ஒதுக்கீடு என்பது, 21 உயிர்களை பலி கொடுத்து வாங்கிய வரம். அது சிலரது வஞ்சத்துக்கும் வன்மத்துக்கும் இரையாவதை அனுமதிக்க முடியாது. வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக, எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பா.ம.க.,வினரும், வன்னியர்களும் தயாராக உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.