தொகுதி பங்கீடு பேச தி.மு.க., குழுக்கள் நியமனம்!: அறிக்கை குழுவுக்கு கனிமொழி தலைமை
தொகுதி பங்கீடு பேச தி.மு.க., குழுக்கள் நியமனம்!: அறிக்கை குழுவுக்கு கனிமொழி தலைமை
UPDATED : ஜன 20, 2024 05:15 PM
ADDED : ஜன 20, 2024 01:14 AM

லோக்சபா தேர்தல் பணிகளை துவங்கும் விதமாக, தி.மு.க.வில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. தொகுதி பங்கீடு பேச்சு குழுவில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி, இம்முறை தேர்தல் தயாரிப்பு குழுவின் தலைவராக மாற்றப்பட்டு உள்ளார்.
தற்போதைய சூழலில், தமிழகத்தில் வலுவான கூட்டணி வைத்திருக்கிற கட்சி தி.மு.க. ஆட்சியில் இருப்பது அதன் கூடுதல் பலம். எனவே, மற்ற கட்சிகளை முந்திக் கொண்டு, லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறது. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பு என மூன்று பணிகளுக்கான குழுக்களை நியமித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில், குழுக்கள் நியமன அறிவிப்பை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள போதிலும், மூன்றிலும் அவரது பெயர் இல்லை.வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைமை பொறுப்பு, எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
பங்கீடு சிக்கல் வரும்போது காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் பேசுவதற்கு ஏதுவாக, தொகுதி பங்கீடு பேச்சுக் குழுவில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் அந்த குழுவில் இல்லை. இது காங்கிரஸ் தரப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
அமைச்சர்கள் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலர் ஏ.கே.விஜயன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், எம்.பி.க்கள்ராஜேஷ்குமார், அப்துல்லா, எம்.எல்.ஏ., எழிலரசன், சென்னை மேயர் பிரியா ஆகியோரும் கனிமொழி தலைமையிலான குழுவில் உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டி.ஆர்.பாலு தலைவராக இருந்தார். கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் குழுவில் இருந்தனர். தற்போதைய குழு நியமனத்தில், கனிமொழிக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலு பேச்சுவார்த்தை குழுவுக்கு ப்ரமோஷன் ஆகிவிட்டார், சிவாவும் அங்கே போய்விட்டார். கனிமொழி, இளங்கோவனை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணி கட்சிகளிடம் பேச்சு நடத்தும் குழு என, இரு குழுக்களிலும் இடம்பெறும் வகையில் கே.என்.நேருவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. சேலம் இளைஞரணி மாநாட்டு குழு தலைமை பொறுப்பும் நேருவிடமே தரப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். வழக்கமாக, இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்று வந்தவர் துரைமுருகன் மட்டுமே.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மண்டல வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். டெல்டா மண்டலம் - நேரு, வடக்கு - அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு - அமைச்சர் தங்கம் தென்னரசு, மேற்கு - அமைச்சர் உதயநிதி, சென்னை மண்டலம் - அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மண்டலங்களில் கூட்டணிக்கு வெற்றி தேடி தர வேண்டிய வேலை, இந்த ஐவரணியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசுதற்கான குழுவில் பாலு தலைமையில் அமைச்சர்கள் நேரு, ஐ,பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிய வரவு பன்னீர்செல்வம். இது துரைமுருகனுக்கு பதிலாக அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவமா; பா.ம.க.,வை சரிக்கட்டும் ஏற்பாடா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், 'எக்ஸ்' பக்கத்தில், தேர்தல் பணிக் குழு தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'தொடங்கியது தேர்தல் 2024 பணி; வெற்றி வாகை சூடுவோம்; இண்டியா கூட்டணி வெல்லும்' என கூறியுள்ளார்.