தி.மு.க., வெளிச்சத்தில் மா.கம்யூ., இல்லை கட்சியின் புதிய செயலர் சண்முகம் பதிலடி
தி.மு.க., வெளிச்சத்தில் மா.கம்யூ., இல்லை கட்சியின் புதிய செயலர் சண்முகம் பதிலடி
ADDED : ஜன 05, 2025 11:49 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மூன்று நாட்கள் நடந்த மா.கம்யூ., 24வது மாநில மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. கட்சியின் புதிய மாநில செயலராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு மதவெறியோடும், மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பது, நிதி வழங்குவதில் பாரபட்சம், அடிப்படை உரிமைகளில் பாரபட்சமாகவும், மக்கள் விரோதமாகவும் செயல்படுகிறது. அதற்கு எதிராக கம்யூ., கட்சி வலிமையான போராட்டத்தை முன்னெடுக்கும்.
தாராளமயம், தவறான பொருளாதார கொள்கையால், வேலையின்மை, விலைவாசி உயர்ந்து மக்கள் பாதித்துள்ளனர். வேலை வாய்ப்பை பறிக்கும் வேலை செய்கின்றனர். அவுட்சோர்சிங், ஒப்பந்த நியமனங்கள் தொடர்கிறது. இந்த பொருளாதார கொள்கைக்கு எதிராக போராட்டம் தொடரும்.
தமிழகத்தில் தி.மு.க.,வோடு இணைந்து, மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் மா.கம்யூ., பயணிக்கும். அதே நேரத்தில், தமிழகத்தில் நவீன மயம், தாராளமயம் அமல் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும் எங்கள் போராட்டம் இருக்கும்.
தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற அடிப்படை உரிமையை பறிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. எங்கள் மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாலகிருஷ்ணன் எங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினார். அதை தி.மு.க., அரசு புரிந்துகொள்ளும்.
தி.மு.க.,வுடன், நாங்கள் பலமுறை உறவோடும், எதிர் அணியிலும் இருந்துள்ளோம். தி.மு.க., ஆதரவால் தான் மா.கம்யூ., உள்ளது என்பது அதீத கருத்து. மக்கள் பிரச்னைக்கு போராடுவதால் தான் மக்களிடம் மா.கம்யூ., வலுவாக உள்ளது.
ஏதோ தி.மு.க., வெளிச்சத்தில் மா.கம்யூ., உள்ளதாக தி.மு.க., தலைமை கூறியிருப்பது சரியல்ல. அதற்காக, முரசொலி பத்திரிக்கையில் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளதும் பொருத்தமானதல்ல.
இவ்வாறு கூறினார்.

