உள்ளாட்சி ஒப்பந்தங்களில் வெடிக்கும் தி.மு.க., உட்கட்சி பூசல் : அதிகாரிகள் தவிப்பு
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் வெடிக்கும் தி.மு.க., உட்கட்சி பூசல் : அதிகாரிகள் தவிப்பு
UPDATED : ஜூன் 01, 2025 09:02 AM
ADDED : ஜூன் 01, 2025 07:51 AM

ஊரக வளர்ச்சி துறையில் உள்ளாட்சி ஒப்பந்தங்களில் தி.மு.க., ஒன்றிய செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் தலையீடு அதிகம் உள்ளதால், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு 'டெண்டர்' விட முடியாத நிலை, மாவட்டம் முழுதும் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் உட்பட 14 ஒன்றியங்கள், 526 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளான இவற்றில், மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் என பலர், பல்வேறு பதவிகளில் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் கடந்த ஜன., 5ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து, உள்ளாட்சி நிர்வாகிகள் பார்த்த பணிகளை, ஊரக வளர்ச்சி துறையினர் மேற்கொள்கின்றனர். அந்த வகையில், ஊராட்சிகளில் சாலை சீரமைப்பு, தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 'டெண்டர்' விட்டு பணி மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட அளவிலான செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய செயலர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள் இடையே, டெண்டர் எடுப்பதில் 'குஸ்தி' ஏற்படுவதால், ஊரக வளர்ச்சி துறையினர் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
திருத்தணியில் உள்ள ஒரு 'மாஜி' மாவட்டத்திற்கும், தற்போது ஆட்சியில் உள்ள மேலிடத்திற்கும் டெண்டர் எடுப்பதில் கடும் போட்டி ஏற்படுகிறது. அதேபோல், திருவாலங்காடைச் சேர்ந்த தி.மு.க.,வின் முக்கிய செயலருக்கும், இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டியை ஆளும் தி.மு.க., நபருக்கும், மாஜி மாவட்டத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போர், கட்சியினர் மத்தியிலே பேசு பொருளாக மாறியுள்ளது.இதுபோல், மாவட்டம் முழுவதும், தி.மு.க.,வினுள் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதால், கிராம மேம்பாட்டு பணிகளுக்கு டெண்டர் விட முடியாத சூழல் நிலவுகிறது.
அதேசமயம், அ.தி.மு.க., சேர்ந்த முக்கிய புள்ளிகளும், டெண்டர் விஷயத்தில் தங்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது, சிறப்பு அலுவலர் பதவிக்காலம் என்பதால், தாங்கள் சுதந்திரமாக செயல்படலாம் என நினைத்தாலும், தி.மு.க., பெயரை பெயரை கூறி ஆளுங்கட்சி நிர்வாகிகளும், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்து தொல்லை தருவதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகங்கள் வாயிலாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 15வது நிதிக்குழு மானியம், அண்ணா மறுமலர்ச்சி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஒரு ஊராட்சிக்கு மேற்கண்ட திட்டங்கள் வாயிலாக ஐந்து ஆண்டுகளில் 1 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி கோருவோருக்கு, பணி ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆனால், டெண்டர் விடுவதில் தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பதவிகளில் இருந்தோர் முட்டுக்கட்டை போடுகின்றனர். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணி ஒப்பந்த ஆணை வழங்க சொல்லி நெருக்கடி தருகின்றனர். இதில் சில தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்களும் அடக்கம்.
தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தங்களது அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களை வரவழைத்து, ஒன்றிய செயலர்கள் சொல்லும்படி நடந்து கொள்ளுங்கள் என உத்தரவிட்டுள்ளனர்.
டெண்டர் எடுப்பது சம்பந்தமாக அவர்களுக்குள் பேசி முடிவெடுக்காமல் எங்களுக்கு நெருக்கடி தருவதால், குழாய் உடைப்பு சீரமைப்பு, தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் விட முடியவில்லை. இதனால், பணிகளை ஏன் மேற்கொள்ளவில்லை என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினால், எங்களால் பதில் அளிக்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -