விஜய் நெருக்கடியை சமாளிக்க இளைஞர்களை வளைக்கும் தி.மு.க.,
விஜய் நெருக்கடியை சமாளிக்க இளைஞர்களை வளைக்கும் தி.மு.க.,
ADDED : நவ 15, 2024 08:55 PM
சென்னை:நடிகர் விஜய் கட்சியில், மாணவர்கள், இளைஞர்கள் இணைவதை தடுக்க, பேச்சுப் போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தி, அதிக வெகுமதிகளை பரிசாக வழங்கி, அவர்களை வளைக்கும் முயற்சியில், தி.மு.க., ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க.,வில் தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, இளைஞர் அணி போன்றவற்றில் உள்ள பலர், விஜயின் தீவிர ரசிகர்கள். தி.மு.க.,வில் இருந்தாலும், விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக இருந்தனர்.
தமிழக வெற்றி கழகம் கட்சியை துவக்கிய விஜய், முதல் மாநாட்டை நடத்தி உள்ளார். அதில் பேசிய விஜய், தங்களின் பிரதான எதிரி தி.மு.க., என்பதை பகிரங்கமாக அறிவித்தார். அவரது கட்சிக்கு, விடுதலை சிறுத்தைகள், பா.ஜ., போன்ற கட்சிகளில் இருந்து, பலர் தாவி வருகின்றனர்.
விஜயின் நேரடி தி.மு.க., எதிர்ப்புக்கு பின், தி.மு.க.,வில் பொறுப்பில் இல்லாத இளைஞர்கள், விஜய் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து, தி.மு.க., கொடியை அகற்றிவிட்டு, விஜய் கட்சி கொடியை ஏற்றும் வீடியோவை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதை பார்த்து, இன்னும் பலர் இணைய தயாராகி வருகின்றனர். எனவே, வரும் 2026 சட்டசபை தேர்தலில், விஜய் கட்சியால், புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என, தி.மு.க., அஞ்சுகிறது.
இதை தடுக்கவும், இளைஞர்களை வளைக்கவும், தி.மு.க.,வினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, கல்லுாரிகளில் மாணவர் மன்றங்களை துவக்கி, அதன் வாயிலாக பேச்சுப் போட்டி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, ரொக்க பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிக இளைஞர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படும். அவர்களுடன் வரும் சட்டசபை தேர்தல் வரை தொடர்பில் இருந்து, தேவையான உதவிகள் செய்து தரப்பட உள்ளன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

