தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் போது அப்படி., ஆளும் கட்சியாக இருக்கும் போது இப்படியா?
தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் போது அப்படி., ஆளும் கட்சியாக இருக்கும் போது இப்படியா?
ADDED : பிப் 18, 2025 12:04 PM

சென்னை: நீண்ட காலமாக தங்களின் கோரிக்கைக்காக போராடி வரும் அரசு ஊழியர்கள் அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்காக செவி சாய்க்காமல் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவது ஏன் ? திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டம் நடத்தி மருத்துவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இப்போது மவுனம் காப்பது ஏன் என்றும் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியிருப்பதாவது :
தமிழக முதல்வர் ஸ்டாலின் மார்ச் 1 ம் தேதி தன் பிறந்த நாள் கொண்டாடுகிறார். மறைந்த தனது தந்தை கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் போது அவரது அரசாணையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்வரின் பிறந்த நாள் பரிசு தருவாரா ?
பிறந்த நாள் பரிசாக, அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட நாம் வேண்டுகிறோம். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தன் தந்தையின் ஆணைக்கு உயிர் கொடுக்கும் அறிவிப்பை தன் பிறந்த நாளன்று வெளியிடுவது, முதல்வருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக, பாக்கியமாக இருக்கும் என நம்புகிறோம். எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தர வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய பிறகும், கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்ட பிறகும், கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. என்பது கவலை அளிக்கிறது.
மேலும் கொரோனா பேரிடரில் மக்களை காப்பாற்ற போராடி மாண்ட அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பம் கண்ணீர் சிந்துவது தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வரின் கைகளால் வழங்கிட வேண்டுகிறோம்.
நிலையை மாற்றுவதா ?
ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 2009 ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து கோரிக்கையை நிறைவேற்ற ஆதரவு அளித்தார். ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என உறுதியளித்த தற்போதைய முதல்வர் ஆளும் கட்சியாக வந்த போது எங்களை மறந்தது ஏன்?
பழைய ஓய்வூதியம்
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.
பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தாமல், குழு அமைத்ததற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசு ஊழியர்கள் கொதிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.
இதுபோல் அரசு போக்குவரத்துகழக ஊழியர்களுக்கு நீண்ட காலமாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , மருத்துவர்களுக்கு சலுகைகள் ஏராளம் கிடைக்கும் என்ற நல்ல எண்ணம் நிலவி வந்தது. ஆனால் தற்போதைய ஸ்டாலின் அரசு ஏன் அரசு ஊழியர்களை கண்டுக்காமல் உள்ளது என்ற அவப்பேச்சு துவங்கி விட்டது. ஆட்சியில் இருந்தால் ஒரு நிலையும், எதிர்கட்சியில் இருந்தால் ஒரு நிலையும் என இரட்டை வேடம் போடுவது நீண்ட காலம் நிலைக்காது என்கின்றனர் அரசு ஊழியர்கள்.

