'வக்ப் சட்ட திருத்த மசோதாவில் இரட்டைவேடம் போடும் தி.மு.க.,'
'வக்ப் சட்ட திருத்த மசோதாவில் இரட்டைவேடம் போடும் தி.மு.க.,'
ADDED : ஏப் 05, 2025 09:38 PM
ஓசூர்,:''வக்ப் சட்ட திருத்த மசோதாவில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது,'' என, தம்பிதுரை எம்.பி., கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அவர் அளித்த பேட்டி:
பார்லி.,யில் வக்ப் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக, தி.மு.க., எதிர்க்கவில்லை. மாறாக, தி.மு.க.,வின் கனிமொழி, திருச்சி சிவா மற்றும் கேரள கம்யூ., - எம்.பி.,க்கள், வக்ப் சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய, விவாதங்களின் போது வலியுறுத்தினர். அதை பா.ஜ., ஏற்று செயல்பட்டிருந்தால், வக்ப் சட்டத் திருத்த மசோதாவை, தி.மு.க., ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாக இருந்தால், விவாதங்களின் போது திருத்தத்துக்கு ஏன் வலியுறுத்த வேண்டும்? இந்த விவகாரத்தில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.
முஸ்லிம் மக்களுக்காக, வக்ப் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அ.தி.மு.க., தான் முழுமையாக குரல் கொடுத்துள்ளது.
ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி.,யான என்.ஆர்.இளங்கோ பேசும்போது, இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் குடியேறிய ஹிந்து மக்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்தினார். ஆனால், புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு குடியுரிமை கேட்டு வலியுறுத்தவில்லை. இதிலும் தி.மு.க., இரட்டை வேடம் தான்.
தமிழக சட்டசபையில் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஆனால், பார்லிமென்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தி.மு.க., - எம்.பி.,க்கள் பேசுகின்றனர்.
ஒரு பக்கம் மத்திய அரசுக்கு அஞ்சும் தி.மு.க., இன்னொரு பக்கம் அவர்களை எதிர்ப்பது போல் நாடகமாகி, சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வருகிறது. அம்மக்கள் உஷாராகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

