பெயர்தான் வேறு; கொள்கை ஒன்றுதான் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விமர்சிக்கும் சீமான்
பெயர்தான் வேறு; கொள்கை ஒன்றுதான் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விமர்சிக்கும் சீமான்
ADDED : ஏப் 14, 2025 05:46 AM

சென்னை: “தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கட்சிகள்தான் வேறு; இரண்டுக்கும் கொள்கை மாறுதல் கிடையாது. நான் மக்களோடு இருப்பேன்,” என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நா.த.க., சார்பில், சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற சீமான் அளித்த பேட்டி:
வக்ப் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை என திருத்தம் கொண்டு வந்திருந்தால் பிரச்னை இல்லை. வக்ப் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் ஹிந்து மதத்தினரை நியமிக்க வேண்டும் என, சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது சரியல்ல; சிக்கலைத்தான் உருவாக்கும்.
இது சரி என்றால், ஹிந்து கோவில் நிலங்களை முறைப்படுத்த கமிட்டி அமைத்து, அதில், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை நியமியுங்கள். அதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வாருங்கள்.
வக்ப் திருத்த சட்டத்தில், பெரும் குறைகள் உள்ளன. தி.மு.க., கூட்டணிக்கு 40 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், 22 பேர் தான், வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஓட்டளித்துள்ளனர். மீதி ஓட்டுகள் என்ன ஆனது என்றால், பதில் இல்லை.
பார்லிமென்டில் பேசாமல், இங்கு தீர்மானம் போடுவதும், வழக்கு தொடர்வேன் என்பதும் யாரை ஏமாற்ற?
ஆட்சியில் இருப்போர், ஓட்டை மட்டும் குறிவைத்து செயல்படுகின்றனர். அப்படி செய்வோர், பெரும் கொடுமைக்காரர்கள்.
பஞ்சமர் நிலம் 12 லட்சம் ஏக்கர்; சீர்மரபினருக்கு வழங்கப்பட்ட 39,000 ஏக்கர்; முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட 10,000 ஏக்கர் நிலம் ஆகியவை, ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளன. அவற்றை, அரசு மீட்டு தர வேண்டும்.
அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். அங்கும் ஊழல், இங்கும் ஊழல்.
அங்கும் சாராயம், இங்கும் சாராயம் என, அனைத்தும் ஒன்றுதான். இரு கட்சியினரும் கச்சத்தீவை மீட்க போராடுவோம்; டாஸ்மாக்கை மூடுவோம் என்பர். ஆட்சிக்கு வந்ததும், இருவரும் அமைதியாகிவிடுவர்.
இதனால்தான் காமராஜர், இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார். அந்த மட்டைகளை உரிக்கத்தான் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளின் பெயர்தான் வேறு; கொள்கை மாறுதல் கிடையாது. தமிழகத்தில் 40 முனை போட்டி இருந்தாலும், என் முனை தான் கூர்முனை. மக்களோடு இருப்பேன். நான் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியுடன் கூட்டணிக்கு விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.

