மத்திய நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க.,வுக்கு இல்லை: பழனிசாமி
மத்திய நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க.,வுக்கு இல்லை: பழனிசாமி
ADDED : ஜன 23, 2025 09:23 PM
சென்னை:'மத்திய அரசிடம் நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க., அரசுக்கு இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
நுாறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு, இரண்டு மாதங்களாக, தி.மு.க., அரசு சம்பளம் வழங்காததை சுட்டிக்காட்டினால், தங்களது வழக்கமான பாணியான, 'மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்' என்பது போல, டில்லி பக்கம் கையை நீட்டி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தப்பிக்க முயற்சிக்கிறார்.
ஏதோ தி.மு.க., ஆட்சி அமைத்த பின் தான் தமிழகத்தை, மத்திய அரசு வஞ்சிப்பது போன்று, அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமக்கு முறையாக நிதி வழங்குவதில்லை. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் நிதி வந்தபோதும், வராதபோதும், மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களில் எந்த தொய்வும் ஏற்பட்டதில்லை. அப்படியொரு நிர்வாக திறன்மிக்க ஆட்சியை நாங்கள் நடத்தினோம். உங்களைப் போன்று, எதற்கெடுத்தாலும் டில்லியை கைகாட்டும், 'பொம்மை' ஆட்சி நடத்தவில்லை.
மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகிற நிர்வாக திறன் இல்லையென்றால், அதை ஒப்புக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

