வாரிசுகளுக்கு 'சீட்' கேட்டு தி.மு.க., 'தலை'கள் படையெடுப்பு
வாரிசுகளுக்கு 'சீட்' கேட்டு தி.மு.க., 'தலை'கள் படையெடுப்பு
ADDED : டிச 21, 2025 05:08 AM

வரும் சட்டசபை தேர்தலில் வாரிசுகளுக்கு 'சீட்' கேட்டு, தி.மு.க., சீனியர்கள், கட்சித் தலைமையிடம் தொடர்ந்து பேசி, நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலையில் கடந்த டிச. 14ல் தி.மு.க., இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் வேலு, துரைமுருகன், காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நம்பிக்கை அந்த மாநாட்டில், துணை முதல்வரும் கட்சியின் இளைஞர் அணி செயலருமான உதயநிதி பேசும்போது, ''சட்டசபை தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்தோருக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
''இந்த கோரிக்கை நுாறு சதவீதம் ஏற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில், அடுத்த முறை சட்ட சபைக்கு தி.மு.க., சார்பில் கூடுதல் எண்ணிக்கையில் இளைஞர்கள் செல்வர்'' என பேசினார்.
இந்த பேச்சு, தி.மு.க.,வில் சீனியர் களாக இருக்கும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனாலும், இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முடிவில் அவர்கள் இருப்பதாக தெரிகிறது.
அதாவது, இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பு என்கிறபோது, இளைஞர்களாக இருக்கும் தங்களுடைய சொந்த வாரிசுகளை களம் இறக்க, அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபைத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக அமைச்சர் துரைமுருகன் உள்ளார். வயது முதிர்வு காரணமாக, வரும் தேர்தலில் தனக்கு 'சீட்' கிடைக்காமல் போகலாம் என நினைக்கிறார்.
அதனால், காட்பாடி தொகுதியில் தன் மருமகள் சங்கீதாவுக்கு சீட் கேட்டு பெறலாம் என நினைக்கிறார்.
ராணிப்பேட்டை தொகுதியில் வென்று அமைச்சராக இருக்கும் காந்திக்கு, அவ்வப்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுவதால், அவரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.
தன் மகனும் கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகியுமான வினோத் காந்திக்கு, ராணிப்பேட்டை தொகுதியை வாங்கும் முடிவில் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நேரடியாக பேச்சு அவரும் வயதுமூப்பு காரணமாக, வரும் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார். தன் மகனும், மா.செ.,வுமான கவுதம சிகாமணியை, திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட வைக்க திட்டமிடுகிறார்.
இதற்காக, கட்சித் தலைமையிடம் நேரடி யாகவே அவர் பேசி வருகிறார். இதே போலவே, தமிழகத்தில் சீனியர் தி.மு.க., தலைவர்களாக இருக்கும் பலரும், தங்களுடைய வாரிசுகளை வரும் தேர்தலில் களம் இறக்க முடிவெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

