ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு தே.மு.தி.க., சிம்மசொப்பனம்; பிரேமலதா
ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு தே.மு.தி.க., சிம்மசொப்பனம்; பிரேமலதா
UPDATED : நவ 17, 2025 08:19 AM
ADDED : நவ 17, 2025 01:59 AM

மதுரை: தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைத்து ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., மட்டுமே என பொதுச்செயலாளர் பிரேமலதா மதுரையில் பேசினார்.
மதுரை கூடல் நகரில் நடந்த 'உள்ளம் தேடி இல்லம் நாடி' பெயரில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதில் பிரேமலதா பேசியதாவது: மதுரையில் தே.மு.தி.க., துவக்கும் 3ம் கட்ட பயணம் டிச.2ல் ஈரோட்டில் நிறைவு பெறும். 4ம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் துவங்கி விருதுநகர் வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடலுாரில் ஜன.9ல் நடக்கும் தே.மு.தி.க., வின் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை, பந்தல்கால் நட்டு பணிகளை துவக்கியுள்ளோம். இது உலகையே திரும்பி பார்க்க வைப்பதாக இருக்கும்.தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைத்து ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., மதுரையில் 2005ல் நடந்த தே.மு.தி.க., வின் மாநாடு உலகின் நம்பர் 1 மாநாடு. மேலே உள்ளவர்கள் கீழே வந்துதான் ஆக வேண்டும்; கீழே உள்ளவர்களும் மேலே செல்லும் காலம் வரும்.
2026 தேர்தலில் மகத்தான கூட்டணியில் வெற்றி பெறுவோம். சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு பின் வரும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். என்னை அடுத்த முதல்வர், நாளைய பிரதமர் என்றெல்லாம் தொண்டர்கள் அழைக்கின்றனர். யாருக்கு என்ன வேண்டுமென்றாலும் கடவுளின் அருளால் கிடைக்கும். கடலுார் 2.0 மாநாட்டுக்கான கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது என்றார்.
மண்டல பொறுப்பாளர் பன்னீர் செல்வம், மாவட்ட அவைத் தலைவர் ராமர், பொருளாளர் சரவணன், துணைச் செயலாளர் மாணிக்க வாசகம், பெத்தானியாபுரம் பகுதிச் செயலாளர் மாரியப்பன் பங்கேற்றனர்.

