தி.மு.க., அமைச்சர்கள் ஊழல் விஞ்ஞானிகள்: அர்ஜூன் சம்பத் விமர்சனம்
தி.மு.க., அமைச்சர்கள் ஊழல் விஞ்ஞானிகள்: அர்ஜூன் சம்பத் விமர்சனம்
ADDED : நவ 04, 2025 02:11 AM

சிவகங்கை:  தி.மு.க., அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் ஊழல் விஞ்ஞானிகள். பண பலத்தை நம்பி தான் தி.மு.க., தேர்தலை சந்திக்க உள்ளது,''  என, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மன்னர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்த வந்த ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வலிமையாக இருக்கிறது. இக்கூட்டணி தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பப்போகிறது.
பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன், சசிகலா உள்ளிட்ட அனைவரும் தி.மு.க.,விற்கு எதிரானவர்கள். அவர்கள் தி.மு.க., ஜெயிக்கிற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள். இக்கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா. அதனை வலுப்படுத்த அமித்ஷா, பழனிசாமி உள்ளிட்டோர் முடிவு செய்வர். தி.மு.க.,வை வீழ்த்த அவர்கள் ஒத்துழைப்பார்கள்.
தி.மு.க., அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் ஊழல் விஞ்ஞானிகள். பா.ஜ., தி.மு.க.,வை குறி வைக்கவேண்டிய அவசியம் இல்லை. கே.என்.நேரு விசாரணையை சந்திக்க வேண்டும். பா.ஜ.,வை குறை சொல்லக்கூடாது. பண பலத்தை நம்பி தான் தி.மு.க., தேர்தலை சந்திக்க உள்ளது.
குரு பூஜை விழாவிற்கு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் வந்தால் போதும். கடந்த காலங்களில் தி.மு.க.,வினர் திருநீறை பூச மனம் இல்லாமல் சென்றனர். தற்போது முன் கூட்டியே பூஜாரியிடம் தீபாராதனை தட்டை தள்ளி வைக்க கூறியுள்ளனர்.
நம்பிக்கை இல்லாவிட்டால் தேவர் குரு பூஜைக்கு தி.மு.க.,வினர் வர வேண்டாம். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜாதி தலைவர் அல்ல. தேசிய தலைவர். ஆலயத்தை காப்பதற்காக மருதுபாண்டியர்கள் உயிர் விட்டவர்கள். ஆசையை துறந்தவர் முத்துராமலிங்கத்தேவர்.
கோவையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசிற்கு பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு குறித்து கவலை கிடையாது. அவர்களுக்கு முகநுாலில் யாராவது தி.மு.க.,வை விமர்சனம் செய்தால் அவர்களை கைதுசெய்யும் முனைப்பில் தான் ஈடுபடுகிறார்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகம் பாலியல் குற்றங்கள் நடக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அவதுாறு பரப்புகிறார்.
பீகாரில் காங்., ஜெயிக்காது. அவர்கள் நீதிமன்றத்திற்கு தாராளமாக செல்லட்டும். மக்களை திசை திருப்புவதற்காக இந்த வேலையை செய்கிறார்கள். அரசு வேலை வாங்கி தருவ தாக அமைச்சர் நேரு லஞ்சம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
முதல்வர் அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். அமைச்சர்களின் ஊழல் அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர். ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்க நவ., 9 சென்னையில் ஹிந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது என்றார்.
பசும்பொன்னில் மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் முத்துராமலிங்கத் தேவருக்கு சனாதன ஹிந்து தர்ம தமிழ் முறைப்படி நட்சத்திர குருபூஜை நடந்தது. இதில் பங்கேற்று அர்ஜூன் சம்பத் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

