பெண்ணுக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது
பெண்ணுக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது
ADDED : ஜன 25, 2024 05:13 PM

சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ.,வின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.
18 வயதுடைய பட்டியலின பெண்ணை டாக்டருக்கு படிக்க வைப்பதாக சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ,35, மருமகள் மார்லினா,31 ஆகியோர் ஆசை காட்டி உள்ளனர்.
பின், தாங்கள் வசித்து வரும், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தி கொடுமைப்படுத்தி உள்ளனர். இளம் பெண்ணின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், காயங்கள் குறித்து டாக்டர்களிடமும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆன்ட்ரோ மற்றும் மார்லினா மீது, பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கிய இருவரும், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருந்தனர்.
அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆன்ட்ரோ, மார்லினாவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.