அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு தி.மு.க., தடையாக இல்லை: அமைச்சர்
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு தி.மு.க., தடையாக இல்லை: அமைச்சர்
ADDED : ஏப் 04, 2025 04:56 AM

சென்னை: ''அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு தி.மு.க., தடையாக இல்லை,'' என்று, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலாக குறிப்பிட்டார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - சேகர்: எனது பரமத்தி வேலுார் தொகுதியிலிருந்து கொடுமுடி வரை, காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட, பழனிசாமி முதல்வராக இருந்த போது, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், பணிகள் துவக்கப்படவில்லை. பாலத்தின் ஒரு கரை அ.தி.மு.க., தொகுதி என்பதாலும், அக்கரை பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதியின் தொகுதி என்பதாலும், பாலம் கட்டப்படவில்லை என, மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
அமைச்சர் துரைமுருகன்: திட்டங்களை செயல்படுத்துவதில், அரசியல் வேறுபாடு பார்ப்பதில்லை. நீங்கள் சொல்லாததையும் செய்து கொடுப்போம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஆற்றுக்கு இக்கரையில் அ.தி.மு.க.,வும், அக்கரையில் பா.ஜ.,வும் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்க, நாங்கள் தடையாக இருப்பது போல சொல்கிறார். அது, உங்கள் பாடு. நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே, நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.