ஏமாற்றவும், பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்கு தெரியும்: தமிழக பா.ஜ.,
ஏமாற்றவும், பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்கு தெரியும்: தமிழக பா.ஜ.,
ADDED : ஏப் 04, 2025 05:55 AM

சென்னை : 'வக்ப் மசோதாவுக்கு எதிரான தி.மு.க.,வின் நாடகம் எல்லாம், சிறுபான்மை ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்திருப்பதும், வக்ப் மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதும், தி.மு.க.,வின் இன்றைய நாடகம். இந்த நாடகம் எல்லாம், சிறுபான்மை ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
முந்தைய வக்ப் சட்டத்தால் பாதிக்கப்பட்டது ஹிந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்துவர்களும் என்பதை முதல்வர் உணரவில்லையா? தயவு செய்து, உங்களின் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த வேண்டாம் முதல்வரே.
முதல்வர் ஸ்டாலினின் அடுத்த நாடகம், 'வக்ப் மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்' என்ற தலைப்பில் ஒரு நுாலை எழுத, தி.மு.க.,வில் ஒருவரை நியமிப்பதாக இருக்கும்.
இதை, தி.மு.க., தேர்தல் யுக்தியாக பயன்படுத்தி, 2026 சட்டசபை, 2029 லோக்சபா தேர்தல்களில் அப்பாவி இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தும். தி.மு.க.,வுக்கு ஏமாற்றவும், பிரிக்கவும் மட்டும் தான் தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

