தி.மு.க., ஓட்டை எடுப்பார் விஜய் பா.ஜ.,வின் எச்.ராஜா கணிப்பு
தி.மு.க., ஓட்டை எடுப்பார் விஜய் பா.ஜ.,வின் எச்.ராஜா கணிப்பு
ADDED : செப் 28, 2024 02:49 AM
சென்னை:சென்னை, கொளத்துாரில் உள்ள பா.ஜ. சட்டசபை தொகுதி அலுவலகத்தில் வடசென்னை மேற்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில பொறுப்பாளர் எச்.ராஜா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
நடிகர் விஜய் தி.மு.க., ஓட்டை குறிவைத்துத்தான் களம் இறங்கி உள்ளார். தி.மு.க.,வின் கொள்கைகளை தான் அவர் கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்பச் சொல்கிறார். அதனால் தி.மு.க., ஓட்டைத்தான் பெறுவார். அதை தவிர்த்து மேலும் ஓட்டுகள் செல்கிறது என்றால், அ.தி.மு.க.,விலிருந்து செல்லும். மற்றபடி, பா.ஜ., ஓட்டு அவருக்கு போகாது.
தி.மு.க.,வை நோக்கி சிறுத்தை போல பாய்ந்த திருமாவளவன், ஸ்டாலினுடன் அறைக்குள் சென்ற பின், என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. பேரம் பேசப்பட்டதா அல்லது திருமாவளவன் பணிந்தாரா... ஸ்டாலின் பணிந்தாரா என்பது தெரியாது. அறைக்குள் போனவர் பூனையென வெளியே வந்தார். அது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும்.
அக்டோபர் 2 அன்று, வி.சி., மாநாடு நடக்கிறது. அது, மது உற்பத்தியாளர்கள்; மது விற்பனையாளர்கள்; மது பிரியர்கள் இவர்கள் சேர்ந்து நடத்தும் மாநாடு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பா.ஜ., அழைத்தது என்பது வடிகட்டிய பொய், உண்மை கிடையாது.
471 நாள் கழித்து செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டது போல கொண்டாடுகின்றனர். நிபந்தனை ஜாமினில் தான் வந்துள்ளார். வழக்கு விசாரணை நிறைவு பெற்றதும், மீண்டும் ஜெயிலுக்குத்தான் செல்வார்.
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு 2023ல்உச்ச நீதிமன்ற தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், ஆளும் அரசு நீதிமன்றங்களை மதிப்பதில்லை. நீதிமன்றத் தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை.
இன்று ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு பேரணிக்கு என்ன நிபந்தனை போடுகிறார்களோ, அத்தனை நிபந்தனைகளையும் தி.மு.க., காஞ்சியில் நடத்தும் பவளவிழா கூட்டத்துக்கும் போட வேண்டும்.இல்லையென்றால், டி.ஜி.பி., அந்த பொறுப்பை சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்று அர்த்தம்.
இவ்வாறு பேசினார்.