கல் குவாரி வாயிலாக தி.மு.க.,வினருக்கு தினமும் ரூ.10 கோடி: பழனிசாமி
கல் குவாரி வாயிலாக தி.மு.க.,வினருக்கு தினமும் ரூ.10 கோடி: பழனிசாமி
UPDATED : செப் 27, 2025 04:52 AM
ADDED : செப் 27, 2025 04:50 AM

கரூர்: ''கல் குவாரிகள் வாயிலாக, தி.மு.க., நிர்வாகிகளுக்கு தினமும் 10 கோடி ரூபாய் பணம் செல்கிறது,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கரூர் வேலுசாமி புரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனைக்கு, தி.மு.க., அரசுதான் காரணம். போதை பொருள் விற்பனை தொடர்பாக, திண்டுக்கல் துணை மேயரின் மகனுக்கு, போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரத்தில் நடந்த கொலையை, போலீசார் மறைத்து, மாற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில், கிட்னி திருட்டு நடக்கிறது.
தி.மு.க.,வினர் நடத்தும் மருத்துவமனைகளில், யாரேனும் சிகிச்சை பெற்று இருந்தால், உரிய பரிசோதனை செய்து உடல் உறுப்புகள் இருக்கின்றனவா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
கல் குவாரிகளில், தி.மு.க.,வினர், ஒரு டன்னுக்கு 100 ரூபாய் லஞ்சம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது. தினமும், 10 லட்சம் டன்னுக்கு, 10 கோடி ரூபாய் தி.மு.க., நிர்வாகிகளுக்கு செல்கிறது.
அதை வைத்துக் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை விலைக்கு வாங்க, தி.மு.க.,வினர் திட்டம் போட்டுள்ளனர்.
அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தபோது, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மிக கடுமையாக அவரையும் அவருடைய தம்பியையும் விமர்சித்தார்; இப்போது பாராட்டுகிறார்.
பொய் பேசுவதில் வல்லவரான செந்தில் பாலாஜிக்கு, டாக்டர் பட்டம் வழங்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும், மக்களை ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டி, வெற்றி பெறுபவர் செந்தில் பாலாஜி.
அ.தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் தவறு செய்ததால், ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.
மின்துறை அமைச்சராக இருந்தபோது, செய்த ஊழல்களிலும் விசாரணை நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, இருக்க வேண்டிய இடத்தில், செந்தில் பாலாஜி பத்திரமாக இருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.