பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் மன்னிப்பு; திமுக 'மாஜி' பொன்முடி விடுவிப்பு
பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் மன்னிப்பு; திமுக 'மாஜி' பொன்முடி விடுவிப்பு
ADDED : நவ 04, 2026 05:54 PM

2025ம் ஆண்டு ஏப்ரலில் சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், திமுக மாஜி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, சைவம், வைணவம், பெண்கள் குறித்து அவர் பேசியது சர்ச்சையாக மாறியது.
அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநகராட்சியின் 134வது வார்டு பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன் என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் குற்றவியல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மத உணர்வுகளை புண்படுத்துகிறார், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொன்முடியின் பேச்சு இருந்ததாக வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. பின்னர் விசாரணைகளின் போது ஆஜர் ஆகாததால் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர், ஆக.7ம் தேதி சரண்டானதால், பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது பேச்சுக்கு பொன்முடி பொது வெளியில் மன்னிப்பு கோரி உள்ளார்.
எனவே அவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக உமா ஆனந்தன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், பொன்முடி விடுவிக்கப்பட்டார்.
