ஒரு தொகுதிக்கு 3 பேர் பட்டியல்; தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க.,
ஒரு தொகுதிக்கு 3 பேர் பட்டியல்; தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க.,
UPDATED : ஏப் 03, 2025 01:36 AM
ADDED : ஏப் 02, 2025 07:54 PM

சென்னை:சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும், சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கி, வரும் செப்டம்பரில் வேட்பாளர்களை அடையாளம் காட்ட, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் உளவு துறை வாயிலாக பட்டியல் பெற்று, அவர்களில் யாருக்கு அதிக ஆதரவு என்பதை அறியும் பணியில், அக்கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
ஆளும் கட்சி, பலமான கூட்டணி என்ற நிலை இருந்தாலும், சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 200 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் இலக்கு வைத்துள்ளார்.
இதனால் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் சரிபார்ப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பணிகளில் கட்சியினரும், மக்கள் பிரநிதிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடவே, ஆறு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை முழுவீச்சில் முடுக்கி விடவும் தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக, தொகுதியில் மக்களிடம் யாருக்கு செல்வாக்கு உள்ளது, யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற அடிப்படையில், தொகுதிக்கு மூன்று பேர் பட்டியலை, உளவு துறை வாயிலாக, தி.மு.க., மேலிடம் வாங்கி விட்டது.
அப்பட்டியலை, கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்திடம் வழங்கி, அவர்களின் உண்மையான செல்வாக்கு குறித்த விபரங்களும், அவர்கள் மீது மக்களிடம் இருக்கும் அபிமானம் குறித்த தகவல்களை அறியும் பணி நடக்கிறது. சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்ததும், சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, தேர்தல் பணிகள் குறித்து, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் ஆலோசிக்க உள்ளனர். அதில், வேட்பாளர்களை இறுதி செய்து, தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது.
அதை தொடர்ந்து, செப்டம்பரில் நடக்கும் முப்பெரும் விழாவில், வேட்பாளர்களின் விபரங்களை கட்சியினரிடம் மட்டும் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது வெற்றிக்கான யுக்தியாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

