ADDED : மார் 26, 2025 08:48 PM
சென்னை:'நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், தமிழகத்திற்கு, 4,034 கோடி ரூபாய் தராமல் வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில், வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு, கடந்த நான்கரை மாதங்களாக, தமிழகத்திற்கு தர வேண்டிய 4,034 கோடி ரூபாய் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வழங்காதது குறித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எவ்வித பதிலையும் மத்திய அரசு தரவில்லை.
எனவே, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க. சார்பில், வரும் 29ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும், தலா இரண்டு இடங்களில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன் பெறுவோரை திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.