ADDED : அக் 23, 2024 02:37 AM
சென்னை:சென்னையில் தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த விழாவில் காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக ராஜிவ் காந்தி பேசியதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய படத்துக்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து சமூக வலைதளங்களில் காங்கிரஸார் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜிவ் காந்தி வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை:
சில தினங்களுக்கு முன் 'காமராஜரும், கருணாநிதியும்' என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் காமராஜர் குறித்து நான் பேசியது காங்கிரஸ் கட்சியினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காமாஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தை தெரிவித்தனர். காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை.
காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து. என் பேச்சை வைத்து 'இண்டியா' கூட்டணிக்குள் உரசல் என விஷம பிரசாரம் செய்து மத பாசிச கும்பலும், அடிமை அ.தி.மு.க.,வும் குளிர் காய விரும்புகிறது.
அதற்கு ஒரு போதும் என் பேச்சு இடம் தராது. நான் பேசியதன் வாயிலாக மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தை மனதார தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.