வன்னியரை ஏமாற்ற அதே நாடகம் தி.மு.க., அரசு மீது ராமதாஸ் காட்டம்
வன்னியரை ஏமாற்ற அதே நாடகம் தி.மு.க., அரசு மீது ராமதாஸ் காட்டம்
ADDED : அக் 06, 2024 07:45 PM
சென்னை:'உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், உரிய தரவுகளை திரட்டி, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.50 சதவீதத்திற்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு இருப்பதாக, கடந்த ஆக., 3ம் தேதி, ஒரு தகவலை தி.மு.க., அரசு கசிய விட்டது. அதில் எந்த புள்ளிவிபரமும் முழுமையாக இல்லை.
இந்நிலையில், கடலுாரைச் சேர்ந்த எஸ்.பி.கோபிநாத், ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விபரங்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கும்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
அவர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காத பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, கடந்த ஆக., 3ம் தேதி ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட புள்ளிவிபரங்கள் அடங்கிய கடிதத்தையே பதிலாக வழங்கியுள்ளது.
இதன் வாயிலாக, திராவிட மாடல் அரசு நடத்தி வரும் சமூக நீதி மோசடிகளும், தில்லுமுல்லுகளும் அப்பட்டமாக அம்பலமாகி இருக்கின்றன. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகங்களுக்கும், சீர்மரபினருக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்ற விவரங்களை ஜாதிவாரியாக வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அந்த விவரங்களை வெளியிடாத தமிழக அரசு, வன்னியர்களை ஏமாற்றுவதற்காக திரிக்கப்பட்ட புள்ளி விபரங்களையே மீண்டும் வெளியிட்டிருக்கிறது. அதே திரைக்கதை, வசனத்தை எழுதி, மக்களை ஏமாற்ற, மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில், உரிய தரவுகளைத் திரட்டி, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. மாறாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விபரங்களை வெளியிட்டு, வன்னிய மக்களுக்கு சமூக நீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என, தி.மு.க., அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும், ஆதாரங்களுடன் பா.ம.க., அம்பலப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.