கனிமவள கொள்ளை கும்பலை தான் தி.மு.க., நம்பியிருக்கிறது: அண்ணாமலை
கனிமவள கொள்ளை கும்பலை தான் தி.மு.க., நம்பியிருக்கிறது: அண்ணாமலை
ADDED : ஜன 25, 2025 02:31 AM
சென்னை:'2026 தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை, தி.மு.க., நம்பியிருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுதும் கனிம வளங்கள் கொள்ளை போவது தொடர் கதையாகிறது. தி.மு.க.,வின் ஆசியுடன், கரூர் கும்பல், புதுக்கோட்டை கும்பல் என, இரு கும்பல்கள் தலைமையில் தமிழகம் முழுதும் கனிம வளங்களை கடத்தப்பட்டு, கேரளாவுக்கு விற்கப்படுகின்றன.
தமிழகத்தில், கனிம வளங்களை பாதுகாக்க போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையர்களை எதிர்த்து புகார் அளித்த, சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
கனிமவள கொள்ளையை பற்றி புகார் அளித்து, வீடு திரும்பும் முன் கொள்ளையர்களுக்கே புகாரை கசிய விட்டு, சமூக ஆர்வலர்களின் உயிரை பறிக்கும் வகையில், காட்டாட்சியை நடத்துகிறது, தி.மு.க., அரசு.
கோவையில் உள்ள கல் குவாரிகளில் தொடர்ந்து பல விதிமீறல்கள் நடக்கின்றன. இதனால், மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
2026 சட்டசபை தேர்தலில் தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின் போது பணத்தை வாரி இறைக்க தி.மு.க., முடிவு செய்திருக்கிறது. அதற்காக மக்களையும், கனிமவள கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டி, கொலையும் செய்து, கொள்ளை அடிக்கும் இந்த கும்பலின் வசூலை தான் நம்பியிருக்கிறது என்பது, கனிமவள கொள்ளையை தி.மு.க., அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாக தெரிகிறது.
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது, தி.மு.க., ஆட்சியின் கனிமவள கொள்ளையர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் தி.மு.க.,வினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கனிமவள கொள்ளை வாயிலாக, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை சொத்துக்களும் சட்டப்படி மீட்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.