மன்மோகன் மறைவுக்கு 'லீவ்' அறிவிக்காத தி.மு.க., அரசு காங்., பொதுச்செயலர் வருத்தம்
மன்மோகன் மறைவுக்கு 'லீவ்' அறிவிக்காத தி.மு.க., அரசு காங்., பொதுச்செயலர் வருத்தம்
ADDED : டிச 30, 2024 10:15 AM
சென்னை: 'மன்மோகன் சிங் ஆட்சியில், 10 ஆண்டுகள் பங்கு பெற்ற தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், அவரது மறைவுக்கு, பொது விடுமுறை அறிவிக்காதது, காங்கிரசாருக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களுக்கே மனவலியை கொடுத்துள்ளது' என, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் அருள் அன்பரசு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு, காங்கிரசுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கும் பேரிழப்பாகும். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது, தாராள மயமாக்கல் கொள்கையை கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். பிரதமராக, 10 ஆண்டுகள் இருந்தபோது, நாட்டின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் வழிவகுத்தார்.
முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அவர் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிட்டார்; அதற்கு நன்றி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது, அன்றைய அ.தி.மு.க., அரசு, தமிழகத்தில் பொது விடுமுறை அறிவித்தது. அதை அப்போது அனைவரும் வரவேற்றனர்.
மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், தி.மு.க., இடம் பெற்றிருந்தது. தமிழகத்தில் தற்போது தி.மு.க., ஆட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் மறைவுக்கு, பொது விடுமுறை அறிவிக்கவில்லை. காங்கிரசாருக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களுக்கே மனவலியை கொடுத்துள்ளது.
இது, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லாமல் நடந்திருக்கலாம் என்பது தான் அனைவரின் எண்ணம். மன்மோகன் சிங்கிற்கு சென்னையில், அவரது உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைத்து, முதல்வர் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.