மூக்குத்தி கூட வாங்க முடியாது; கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய தி.மு.க., பேச்சாளர்!
மூக்குத்தி கூட வாங்க முடியாது; கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய தி.மு.க., பேச்சாளர்!
UPDATED : ஏப் 19, 2025 09:03 PM
ADDED : ஏப் 19, 2025 07:32 PM

சென்னை: தமிழக அரசு வழங்கும் மாதம் ஆயிரம் ரூபாயில் மூக்குத்தி கூட வாங்க முடியவில்லை, என பொதுக்கூட்ட மேடையில் தி.மு.க., நிர்வாகியிடம் மூதாட்டி ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரை தி.மு.க., பேச்சாளர் அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மகளிருக்கு உதவியாக இருந்து வருகிறது என தமிழக அரசு, அமைச்சர்கள், தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்தது. இந்த விழாவில் திமுக.,வை சேர்ந்த தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசினார். ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்து அவர் பேச துவங்கிய போது, அங்கிருந்த மூதாட்டி ஒருவர் குறுக்கிட்டு, சார், ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன மூக்குத்தி கூட எடுத்துப் போட முடியாது. இன்னைக்கு விக்கிற விலை என்ன விற்கிறது. நகை விலை என்ன என கேட்டார். இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
அதற்கு தமிழன் பிரசன்னா, பத்து பவுன் நகையை ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தால் தான் அந்த ரூபாயை மதிப்பேன் எனக்கூறியதுடன், அந்த பெண்ணின் பெயர், சம்பளம், வேலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டார்.
அதற்கு அந்த பெண், தனது பெயர் மாலதி, தினமும் ரூ.300 சம்பாதிக்கிறேன். கணவர் இல்லை. என்றார்.
பிரசன்னா பேசும் போது, மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆயிரம் ரூபாய் நிதித் திட்டத்திற்கு பல விதிகள் உள்ளது. நாளை இத்தொகை உங்களுக்கு நிறுத்தப்பட்டால், நான் பொறுப்பு கிடையாது, என்றார்.
அங்கிருந்தவர்களிடம் எத்தனை பேர் மாதம் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கின்றீர்கள் என கேட்டார்.
பிறகு இங்கு பலர் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கவில்லை. ஆயிரம் ரூபாய் பிச்சை காசு என்கிறது பா.ஜ., இந்த பெண் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்வது என்கிறார்.
தொடர்ந்து அந்த மூதாட்டியிடம், 'ரேசன் கார்டு உள்ளதா' என தமிழன் பிரசன்னா கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் ரேசன் கார்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து தமிழன் பிரசன்னா பேசும் போது, ரேசன் கார்டு உள்ளது. ஆயிரம் ரூபாய் காசு வருகிறது. அரிசிக்கு காசு இல்லை. எல்லாம் வீடு தேடி வருகிறது ஆனால், இவுங்க என்ன சொல்றாங்க. ஆயிரம் ரூபாய் பற்றவில்லை. இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், தி.மு.க.,வை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.