ஏழாவது முறை தி.மு.க., ஆட்சி முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஏழாவது முறை தி.மு.க., ஆட்சி முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : ஜன 13, 2025 12:45 AM
சென்னை: 'தமிழகத்தில் ஏழாவது முறையாக, தி.மு.க.,வே ஆட்சியில் அமர வேண்டும் என்பதில், தமிழக மக்கள் உறுதியாக இருக்கின்றனர்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை, உலகத்திற்கு உரக்கச் சொல்கிற வகையில், ஜாதி, மத, பாலின பேதமின்றி, இயற்கையை போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்கு துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேய திருவிழா தான் பொங்கல் நன்னாள்.
தமிழகம் முழுதும் கலை,- இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி, பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து, மகிழ்ந்திட செய்ய வேண்டும்.
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளை பரப்பிட முனைகிறது.
இவற்றை எதிர்கொண்டபடியே, தெளிவான திட்டங்களுடனும், துணிவான செயல்பாடுகளுடனும், வெளிப்படை தன்மையுடனும், நிர்வாகத் திறனுடனும் தி.மு.க., அரசு கடமையாற்றி வருகிறது. அன்றாடம் நிறைவேறும் சாதனைகளால், ஏழாவது முறையாக, தி.மு.க.,வே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு, நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டு திருவிழாவாக, பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம்.
'இன்பம் பொங்கும் தமிழகம்' என, ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக்கோலமிட்டு, தை மகளை வரவேற்போம்; தமிழ் தாயை போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.