ஹிந்தியை எதிர்ப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு தி.மு.க., வர்த்தக அணி செயலர் குற்றச்சாட்டு
ஹிந்தியை எதிர்ப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு தி.மு.க., வர்த்தக அணி செயலர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 27, 2025 03:47 AM

கம்பம்,: ''ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதால், நமக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது,'' என, தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்த தெற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலர் காசிமுத்து மாணிக்கம் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் பேசியதாவது:
'ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஈ.வெ.ரா.,வை பற்றி பேச நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு என்ன தகுதி உள்ளது. பிரபாகரன் அண்ணன் மகன் சீமானை பற்றி புட்டு, புட்டு வைத்துள்ளார். ஹிந்தியை எதிர்ப்பதால் நமக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது.
நம்மை விட சிறிய  மாநிலங்களுக்கு அதிக நிதி தருகின்றனர். நாம் ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால், 29 பைசாவை தான் தருகின்றனர். வெறும், 23 சதவீதம் உள்ளவர்கள், 77 சதவீதம் பேரை அடிமைப்படுத்தப் பார்க்கின்றனர்.
ஹிந்தி படிப்பதால் என்ன வந்து விடப்போகிறது என, தெரியவில்லை. வெளிநாடுகளில் தற்போது இந்திய வம்சாவளியினர் பலர் உயர்பதவிகளில் உள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

